நாங்கள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் சிங்கள கட்சிகள் எங்களது தேசத்திலே கொடி கட்டிப் பறக்கும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (08.5) வியாழக்கிழமை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலிலே மக்கள் ஒரு ஆணையை எமக்கு தந்திருக்கிறார்கள்.அந்த ஆணை, என்னவென்றால், எதிர்வரும் காலங்களிலே நாங்கள் ஒற்றுமையாகச் செற்படவேண்டுமென்பதே. நாங்கள் இனியும் அவ்வாறு செயற்படாவிட்டால், மக்கள் அந்த ஆணையை மாற்றி அமைப்பார்கள். எங்களது ஒற்றுமையின்மையாலேயே இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபிக்கு கூடுதலான ஆசனங்கள் கிடைத்தது. ஆனாலும் பிரதேச சபை, நகர சபை, தேர்தல்களில் வடக்கு கிழக்கிலே பாரிய பின்னடைவை ஜேவிபி சந்தித்திருக்கிறது. மக்களும் எங்களுடைய தமிழர்கள் ஆளக்கூடிய வகையிலே தங்களுடைய ஆணையத் தந்திருக்கிறார்கள்.அத்தோடு நாம் ஒற்றுமையாகப் பயணிக்க வேண்டும் என்ற செய்தியையும் சொல்லியிருக்கிறார்கள். தமிழீழ விடுதலை இயக்கத்தைப் பொறுத்தவரையிலே, அடுத்தடுத்து வருகின்ற தேர்தலாக இருக்கலாம் போராட்டங்களாக இருக்கலாம் அனைத்தும் “தமிழ் தேசிய கூட்டமைப்பு” என்ற அடிப்படையில் தான் நடக்க வேண்டும். அதற்கான ஒரு முயற்சியைத் தான் நாங்கள் மேற்கொள்ளுகிறோம். அது சாத்தியப்படுமென நான் நினைக்கின்றேன். அந்த வகையிலே உள்ளூராட்சி மன்ற தேர்தலை வைத்து பார்க்கின்ற போது, வடக்கு கிழக்கிலே யாரும் தனித்து ஆட்சி செய்கின்ற வாய்ப்புகள் இல்லாது இருக்கின்றது. நாங்கள் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரங்களில் கூறியது போல தேசியத்தை நேசிக்கிற கட்சிகளுடன் தான் எங்களுடைய ஆட்சி அமைக்கின்ற செயற்பாடுகள் இருக்கும். ஆகவே நாங்கள் தமிழரசுக் கட்சியோடும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடனும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.ஒற்றுமைக்கான ஆரம்ப அடிக்கல்லாக இந்த செயற்பாடானது அமையும். இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக ஓர் அணியாக மக்களை சந்திக்கின்ற வாய்ப்பினை ஏற்படுத்துவோம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையான வாக்கினை அளிக்கவில்லை. எனவே என்னைப் பொறுத்தவரையில் மக்களுடைய ஆணை, ஆசை, விருப்பம், எல்லாம் இந்த தேர்தலில் தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. அதை உணர்ந்தவர்களாக நாம் செயற்பட வேண்டும். இல்லையென்றால் சிங்கள கட்சிகள் எங்களுடைய தேசத்திலேயே கொடி கட்டி பறக்கின்ற வாய்ப்பினை நாங்களே உருவாக்கும் ஒரு அவல நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.”என்று தெரிவித்தார்.









