மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் வடக்கு கிழக்கு மற்றும் மலையகத்திலே இயங்கி வருகின்ற 34 பெண்கள் அமைப்பினை இணைத்து, அறிக்கை ஒன்றை எழுதி தேர்தல் ஆணையத்திற்கு இன்றைய தினம் சமர்ப்பித்துள்ளதாக
மன்னார் மாவட்ட மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவி மகாலட்சுமி குருசாந்தன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம்(07.05)புதன்கிழமை மாலை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,
“கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெண்களுடைய 25 வீத கோட்டாவைத் தக்க வைக்கும் முகமாக வடக்கு, கிழக்கு,மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 34 பெண்கள் அமைப்புடன் இணைந்து அறிக்கை ஒன்றை எழுதி இன்றைய தினம்(07) தேர்தல் ஆணையகத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம.
அந்த அறிக்கையில் நாங்கள் தெரிவித்துள்ளதாவது,
கடந்த காலங்களிலே பெண்கள் தேர்தலில் போட்டியிட்டாலும் கூட அவர்களுடைய அரசியல் பிரவேசம் என்பது மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
இம்முறை உள்ளுராட்சித் தேர்தலிலே பெண்களுடைய பங்குபற்றுதலை முழுமையாக அதாவது 25 வீதமான கோட்டாவை நிலை நிறுத்துமுகமாக இந்த அறிக்கையைத் தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
தேர்தல் ஆணையகத்தினால் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் அடிப்படையில் இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பெண்களை உள்வாங்கும் முகமாக 25 வீத கோட்டா முறை நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது
அதனடிப்படையிலேயே ஒவ்வொரு கட்சிகளும் பெண்களை
உள்வாங்கியதில், இம்முறை பெண்களும் சுதந்திரமாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு இந்த தேர்தலிலே மிகவும் வெற்றிகரமாக களம் இறங்கியதை நாங்கள் காணக்கூடியதாக இருந்தது.
இருப்பினும் கடந்த காலங்களிலே தேர்தலில் பெண்கள் போட்டியிட்டாலும் கூட அவர்களை, வாக்குகளைப் பெறும் ஒரு சக்தியாகவே பாவித்து வந்தனர்.
அதனால் பெண்களுடைய அரசியல் பிரவேசம் என்பது மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
இம்முறை கட்சிகளுக்கே அனைத்து வாக்குகளும் போயிருக்கின்றது. ஆசனங்கள் கிடைக்கின்ற போதும் பெண்களுடைய 25 வீத கோட்டாவை ஒவ்வொரு கட்சியும் உறுதிப்படுத்த வேண்டும்.அதாவது அவர்களுடைய கோட்டாவை வழங்க வேண்டும்.
இருப்பினும் சில கட்சிகள் ஒன்று இரண்டு ஆசனங்களைத் தான் பெற்றுள்ளது.இருந்தபோதிலும் அந்தக் கட்சிகள் கூட இந்த பால்நிலை சமத்துவத்தை நிலை நிறுத்துவதற்காக பெண்களை உள்வாங்க வேண்டும். இதற்குத் தேர்தல் ஆணையகம் முழுமூச்சாகச் செயற்பட வேண்டும் என்பதே எங்களுடைய
கோரிக்கையாக உள்ளது.
மேலும்,இதனைத் தேர்தல் ஆணையகத்தினால் மட்டுமே சட்டரீதியாக நடைமுறைப்படுத்தவும், கட்சிகளுக்கு இதனை வலியுறுத்தவும் முடியும்.ஆகையால் தான்,மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஆகிய நாங்கள், வடக்கு கிழக்கு, மற்றும் மலையகத்தைச் சேர்ந்த 34 பெண்கள் அமைப்புடன் இணைந்து தேர்தல் ஆணையாளருக்கு இந்த அறிக்கையை அனுப்பி வைத்துள்ளோம். என்று தெரிவித்தார்.












Leave a Reply