,

மன்னாரில் சுமுகமாக நடைபெற்று வரும் உள்ளூராட்சி தேர்தல் பகல் 12 மணி வரை 38.43 வீதமானோர் வாக்களிப்பு.(video)

Spread the love
மன்னார் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் மிகவும் சுமுகமான முறையிலே நடைபெற்று வருகின்றது. இதற்கமைய காலை 7 மணி தொடக்கம் மதியம் 12 மணி வரை 38.43 வீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (6.05) செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் மிகவும் ,அமைதியாகவும் சுமூகமான முறையிலும் இடம் பெற்று வருகிறது. மாவட்டத்தில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 144 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. அதன்படி மதியம் 12 மணி வரை மன்னார் மாவட்டத்தில் 38.43 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மன்னார் நகர சபை பிரிவில் 34.79 வீத வாக்குகளும்,மன்னார் பிரதேச சபை பிரிவில் 37.02 வீத வாக்குகளும்,நானாட்டான் பிரதேச சபை பிரிவில் 40 வீத வாக்குகளும்,முசலி பிரதேச சபை பிரிவில் 45 வீத வாக்குகளும்,மாந்தை மேற்கு பிரதேச சபை பிரிவில் 36 வீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. பகல் 12 மணி வரை மன்னார் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 111 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இது 38.43 வீத வாக்குகளாக காணப்படுகிறது.மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை 32 தேர்தல் முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இருப்பினும் அவை பாரதூரமான முறைப்பாடுகள் இல்லை.சாதாரண சட்டத்துடன் தொடர்புடைய முறைப்பாடுகளே கிடைக்கப் பெற்றுள்ளது. அத்துடன் மன்னார் மாவட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் இடம்பெற்று வருகின்றது என தெரிவித்துள்ளார்.    

You cannot copy content of this page