தமிழ் மக்களின் கருத்துக்களை நாங்கள் அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்ல உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மக்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் நேற்றைய தினம்(26.04)சனிக்கிழமை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்,

இங்கு மேலும் தெரிவித்த அவர்,
நாட்டிலே தங்களுக்கு நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வு வேண்டும் எனத் தமிழ் மக்கள் சொல்கிறார்கள். அதை நாங்கள் மீண்டும் ஒரு முறை அரசாங்கத்திற்கு எடுத்துச் சொல்வதற்கு இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளை வைத்துக் கொண்டு என்.பி.பி அரசாங்கமானது, வடக்கு மக்கள் தமிழரசுக் கட்சியை நிராகரித்து விட்டார்கள் என்று கூறி வருகிறது.

அத்தோடு,வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் அரசியல் தீர்வை கேட்கவில்லை என்று கூறுகிறார்கள்.இன்று வடமாகாணத்தின் மீது என்.பி.பி கூடுதலாகக் கவனம் செலுத்துகின்றது.கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது வடக்கில் ஆசனங்களைப் பெற்று ருசி கண்டார்கள்.கிழக்கு மாகாணத்தில் பாரிய அடி வாங்கினார்கள்.
என்.பி.பி.அரசாங்கத்தின் அபிவிருத்திகளுக்காக வாக்களித்த தமிழ் மக்கள், கடந்த 6 மாத காலத்திற்குள் .தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.
கடந்த 6 மாதங்களுக்குள் மன்னாரில் என்ன நடந்துள்ளது என்று பார்க்க வேண்டும்.மன்னாருக்கு வந்த ஜனாதிபதி சில வாக்குறுதிகளை வழங்கி விட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் பாராளுமன்ற தேர்தலின் போது அவர் மன்னாருக்கு வருகை தந்து வழங்கிய வாக்குறுதிகள் எல்லாவற்றையும் மறந்து போய் விட்டார். இந்த என் பி பி அரசாங்கம் பொய் செல்வதையே ஒரு தொழிலாக வைத்துள்ளது.
அவர்களுக்கு தமிழ் மக்கள் மடையர்களாக இருப்பார்கள் என்ற எண்ணம் இருக்கலாம்.அதை மாற்றி யமைப்பதற்கான ஒரு தேர்தலாக இத்தேர்தல் அமைய வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம்,மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.










Leave a Reply