தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறாத உள்ளூராட்சி சபைகளுக்கான நிதி ஒதுக்கப்படாது என்று தான் ஒருபோதும் கூறவில்லையென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவில் இன்று சனிக்கிழமை (19.04) இடம்பெற்ற”வெற்றி நமதே ஊர் எமதே” பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,
“உள்ளூராட்சி சபைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கும் கொள்ளையடிக்கப்படுவதற்கும் நிதி ஒதுக்கப்படாது என்பதையே நான் வலியுறுத்தினேன்.
மேலும் உள்ளூராட்சி சபைகள் சரியான முறையில் கொள்கைகளைப் பின்பற்றாமல், நிதியைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளையடிப்பதை அனுமதிக்க முடியாது என்றே நான் தெரிவித்தேன்.
மக்களின் பணம் பிரதேச சபைகளுக்கோ அல்லது நகர சபைகளுக்கோ தவறாகப் பயன்படுத்தப்படுவதற்காக ஒப்படைக்கப்படாது என்பதைத் தான் நான் கூறினேன்” எனத் தெரிவித்தார்
கடந்த (17.04) உள்ளூராட்சி சபை தேர்தலுக்காக
ஏற்பாடு செய்யப்பட்ட “வெற்றி நமதே ஊர் எமதே” பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தியின் கீழ் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான நிதியை உடனடியாக அங்கீகரிக்க முடியும் எனவும் ஏனைய கட்சிகளால் நடத்தப்படும் சபைகளுக்கு இதனை யோசிக்காமல் செய்ய முடியாது, ஏனெனில் அவை கடந்த காலங்களில் ஊழல் நிறைந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.எனவே முழுமையான பரிசீலனை செய்யப்பட்ட பின்பே நிதி வழங்கலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த கருத்து பேசுபொருளாக மாறியதைத் தொடர்ந்து இது தொடர்பில் உண்மைத் தன்மையை ஜனாதிபதி மக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.










Leave a Reply