,

முன்னாள் ராஜாங்க அமைச்சர்  சிவநேசதுரை சந்திரகாந்தன்  மிகப்பெரும் குற்றவாளி-அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ

Spread the love

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் மிகப்பெரிய குற்றவாளி,அவரைத் தேசப்பற்றாளர் என்று உதய கம்மன்பில கூறுவது வெட்கக்கேடானது  என  அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 18 ஆண்டுகளின் பின்னர், கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை அவரது  சட்டத்தரணி என்ற ரீதியில், பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில நேரில் பார்வையிட்டுப் பேசிய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையில்,

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர்தான் பிள்ளையான். அவர் தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே அவருக்காக முன்னிலையானேன்.” – என்று கூறியிருந்தார்.

உதய கம்மன்பிலவின் கூற்றுக்குப் பதில் வழங்கும் போதே, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கூறியுள்ளார்.”கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மிகப்பெரும் குற்றவாளி.

அவரைத் தேசப்பற்றாளர் என்று உதய கம்மன்பில கூறுவது வெட்கக்கேடானது. பிள்ளையான் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன அவை தொடர்பில் நீதிமன்றம் விசாரணை நடத்தி உரிய தண்டனையை வழங்கும். அதேபோல் உதய கம்மன்பிலவும் நல்லவர் அல்லர். அவரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர். நீதிமன்றங்களில் அவருக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page