மக்கள் எம்மோடு தான் இருக்கிறார்கள் என்பதை கடந்த கால தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன என்று தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம்(15.04) செவ்வாய்க்கிழமை மன்னார் எமில் நகர்ப்பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர்,
“மக்கள் தேசிய மக்கள் சக்தி கட்சியோடு தான் உள்ளனர்.மீண்டும் ஒருமுறை அதனை உறுதிப்படுத்தி நிருபிப்பதற்காக எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தலிலே தேசிய மக்கள் சக்தியின் சார்பாக அர்ப்பணிப்புள்ள பொதுநலம் கருதுகின்ற சிறந்த வேட்பாளர்களைக் கொண்ட அணியினை மன்னார் நகர சபையிலே களம் இறக்கி உள்ளோம்.
எனவே எமில் நகர் பகுதியில் உள்ள நமது வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதன் மூலம் சிறந்த உள்ளூராட்சி சபைகளை அமைக்க முடியும்.
கடந்த காலங்களில் நகர சபைகள் பிரதேச சபைகள் வெறுமனே பணத்தை ஈட்டுகின்ற சபைகளாகவே காணப்பட்டது பல மில்லியன் ரூபாய்களை நிரந்தர வைப்பில் இட்டு அதனைப் பாதுகாக்கின்ற ஒரு நிறுவனங்களாக தான் கடந்த காலங்களிலே நகர சபைகள் மற்றும் மாகாண சபைகள் இருந்துள்ளன.
அவ்வாறு இல்லாமல் மக்களிடமிருந்து அறவிடப்படுகின்ற வரிப்பணம் மற்றும் வாடகை போன்ற இதர வருமானங்களை அந்த மக்கள் வாழுகின்ற நகர சபையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அத்துடன் சிறுவர்கள் முதியோர்கள் போன்றவர்களின் பொழுதுபோக்கு இடங்களை அபிவிருத்தி செய்வதோடு மக்களுக்கான வடிகால் அமைப்பு மற்றும் ஏனைய வசதி வாய்ப்புகளை சரியாக செய்து கொடுப்பதாகத்தான் எங்களுடைய நிலைப்பாடு காணப்படுகிறது.
அந்த வகையில் நாங்கள் மக்களோடு மக்களாக, மக்கள் விரும்புகின்ற மக்களுக்கான ஒரு ஆட்சியை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளோம். இந்த உள்ளூராட்சி மன்றங்கள் குட்டி பாராளுமன்றங்கள் என்ற வகையில் நாங்கள் அதனை வெற்றி பெறுவதன் ஊடாக மக்களுக்கான சேவையை ஆற்றுவதற்கு எமது தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் உறுதிப்பூண்டுள்ளனர்.
எனவே இப்பிரதேச மக்கள் தங்களது வாக்குகளை இப்பிரதேசத்தை சேர்ந்த தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அளிக்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

()










Leave a Reply