தமிழரசுக் கட்சியின் வட்டக் கண்டல் வேட்பாளர் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் தேசிய மக்கள் சக்தியின் மாந்தை மேற்கு பிரதேச சபை வேட்பாளர் மீது நேற்றைய தினம் (14.04) திங்கட்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளதாக. தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இன்று (15.04)) செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் மன்னார் எமில்நகர்ப் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் வட்டார அலுவலகத்தைத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் தெரிவித்த அவர்,
“எங்களுடைய கட்சியானது, அநியாயம் அடாவடிகளுக்கு அப்பாலானது. நேர்மையான வழியிலும் அமைதியான முறையிலுமே எமது வேட்பாளர்கள் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றார்கள்.
இதுபோன்ற மிலேச்சத்தனமான தாக்குதல்களால் தமிழரசு கட்சியின் வேட்பாளர்கள் எவ்வகையான கொள்கையுடன் செயற்படுகிறார்கள் என்பது இங்கு மக்களுக்கு அறியக்கூடியதாக இருக்கின்றது.
பாதிக்கப்பட்ட வேட்பாளர் தற்போது மன்னார் மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு தாக்குதலை மேற்கொண்டவர்கள் மது போதையில் இருந்துள்ளார்கள். அதற்கான சான்றுகள் போலீசாரிடம் சிக்கியுள்ளன. அவர்களைப் பரிசோதனைக்கு ட்படுத்திய போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இவ்வகையான உறுப்பினர்களைத் தமிழரசுக் கட்சி உள்வாங்கி இருக்கும் ஒரு கேவலமான நிலைமை காணப்படுகிறது. இது மிகவும் வேதனைக்குரிய விடயமும் கண்டிக்கத்தக்க விடயமும் ஆகும்.
உங்களிடம் தில் இருந்தால் நேர்மையான முறையில் உங்களுடைய கொள்கைகளை கூறித் தேர்தலில் முன்நிற்குமாறு நாங்கள் சவால் விடுகின்றோம் அதை விடுத்து அராஜகப் போக்கில் நீங்கள் வெல்லலாம் என கனவிலும் நினைக்காதீர்கள்.இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளின் ஊடாக ஒரு கட்சி எப்பொழுதுமே வெற்றி பெற முடியாது எனவே மக்கள் இதுகுறித்து விழிப்போடு இருக்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











Leave a Reply