,

நீச்சல் தடாகத்தில் உயிரிழந்த இளைஞன்

Spread the love

வவுனியா, தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்தில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி  உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வவுனியா சிதம்பரபுரம் பகுதியில், உறவினருடன் தங்கி வேலை செய்து வந்த  கண்டி நாவலப்பிட்டியைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் எனத் தெரிய வந்துள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,

வவுனியா, சிதம்பரபுரத்தில் தற்காலிகமாக வசித்து வந்த குறித்த  இளைஞர், தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு நேற்றையதினம் (14.04) திங்கட்கிழமை உறவினர்களுடன்  குளிப்பதற்காக வந்திருந்த நிலையில், நீச்சல் குளத்தில் இறங்கி குளிக்கும் போது அவர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,நீரில் மூழ்கிய இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போதும்  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பிரதே அறையில் வைப்பதற்கு வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் இருந்த குளிரூட்டி கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இயங்கவில்லையெனவும்,
சடலத்தை வாடகை வாகனத்தில் செட்டிகுளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஒப்படைக்குமாறும், (15.04) மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வருமாறும் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில்  குடும்பத்தினர் தமது குடும்ப நிலை காரணமாக சடலத்தை செட்டிகுளம் வைத்தியாலைக்கு கொண்டு செல்ல வாகனத்தை வாடகைக்கு அமர்த்த முடியாத நிலையில் அவதிப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் செய்தி அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் குறித்த குடும்பத்தின் நிலமையை  வன்னி மாவட்ட ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரனின்  கவனத்திற்கு  கொண்டு வந்தபோது உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன்,

சம்பவம் தொடர்பில் கேட்டறிந்த பின் வைத்தியசாலைப்  பிரதிப் பணிப்பாளரின் கவனத்திறகு குறித்த விடயத்தை கொண்டு வந்ததுடன், வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்ட சடலத்தை செட்டிகுளம் அனுப்பி அதனை மீளப் பெற வேணடியது வைத்தியசாலையின் பொறுப்பு எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் வவுனியாவின் பிரதான வைத்தியசாலையின் பிரேத அறை குளிரூட்டி நீண்ட நாளாக பழுதடைந்து இருந்தமை தொடர்பில்  நடவடிக்கை எடுக்காமை தொடர்பிலும் விளக்கம் கோரியிருந்தார்.

இதனையடுத்து வைத்தியசாலையினால் சடலம் பொறுபேற்கப்பட்டு செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இன்று  (15.04) செவ்வாய்க் கிழமை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து  வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page