குருநாகல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணைகள் தீவிரம்

Spread the love

குருநாகலை, வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் கடந்த திங்கட்கிழமை (07) இரவு ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,கடந்த திங்கட்கிழமை (07) இரவு, குருநாகலை – கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள வெஹர பகுதியில் உள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில், ஒரு தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான லொறி ஒன்று எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு வந்திருந்தது.

இரவு 11:30 மணியளவில், லொறியில் உள்ள சிலிண்டர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தாங்கியில் இருந்து எரிவாயு நிரப்பப்பட்டு கொண்டிருந்தபோது, திடீரென வெடிப்பு ஒன்று ஏற்பட்டதனைத் தொடர்ந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.

இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும், நான்கு பேர் பலத்த எரிகாயங்களுக்குள்ளாகி, குருநாகல போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநரும் ஒருவர் என தெரியவந்துள்ளது.

விபத்தினை தொடர்ந்து தீயை அணைப்பதற்காக, குருநாகல மாநகர சபையின் தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் பொலிஸாரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை கொண்டனர்.

எனினும், அதிகாலை 3 மணியளவிலேயே தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடிந்தது.

சம்பவத்தில், லொறியின் சாரதி, அவரது உதவியாளர், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் மற்றும் ஊழியர் உயிரிழந்தனர்.

அவர்களின் உடல்கள் தீயில் கருகிய நிலையில் காணப்பட்டதாகவும். சில உடல் பாகங்கள் சம்பவ இடத்தைச் சுற்றிய பகுதிகளில் சிதறிய நிலையில் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், வீட்டு உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டர்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததோடு, வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிவாயு பெரிய அளவிலான தாங்கியில் சேமிக்கப்பட்டிருந்தது.

வெடிப்பின்போது, ஒரு எரிவாயு சிலிண்டர் அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது விழுந்து, அந்த வீட்டிற்கு சேதம் ஏற்பட்டுள்ள நிலையில்,எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் பம்புகளும் சேதமடைந்துள்ளன.

குறித்த வெடிப்புச் சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது எவ்வாறு என்பது தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில்,

இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைக்கும் வரை, இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என குருநாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page