வடக்கில் மக்களின் காணிகளை அரசுடமையாக்கும் வகையிலான வர்த்தமானி வெளியீட்டை, மே 28ஆம் திகதிக்கு முன் மீளப்பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறினால் அதனைத் தொடர்ந்து மே 29ஆம் திகதி தொடக்கம் நாடு மட்டுமல்ல, உலகையே உலுக்கும் அளவிலான போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றும் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் நேற்று (16.05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் சுனாமி, இடம்பெயர்வு போன்ற காரணங்களால் தமது காணி ஆவணங்களை இழந்துள்ளனர். சிலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், அந்த காணிகளை அரசுடமையாக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது,” என்றார்.
“பழைய சட்டங்களை பயன்படுத்தி மக்கள் காணிகளை அரசுக்கு எடுத்துக்கொள்வது முறையல்ல. இந்த வர்த்தமானி உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் என்று நாம் அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். மே 28ஆம் திகதிக்குள் இது நீக்கப்படாவிட்டால், அடுத்த நாள், மே 29ஆம் திகதி, பெரும் எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்படும்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தப் போராட்டம் எந்த ஒரு கட்சியும் சார்ந்ததில்லையெனவும், இது நாட்டின் தமிழர்களின் வாழ்விட உரிமையை உறுதி செய்யும் விடயமாகும் எனவும் சுமந்திரன் வலியுறுத்தினார்.
“நிலம் இருந்தால்தான் இன வாழ்தலும் தொடரும். எனவே இது அரசியல் கட்சி சார்ந்தது அல்ல. அனைத்து கட்சிகளும், பொதுமக்களும், குறிப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் பங்கு பெற வேண்டும். இந்த மாதம் 28ஆம் திகதி முடிவுடன் காலக்கெடு முடிவடைகின்றது. அதனைத் தொடர்ந்து 29ஆம் திகதி போராட்டம் ஆரம்பிக்கப்படும். இது சர்வதேசம் கவனிக்கக்கூடிய அளவுக்கு வலிமையானதாக இருக்கும்,” என அவர் தெரிவித்தார்.










Leave a Reply