சமூக வலைத்தளம் மூலம் போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி ஆண்களிடம் கொள்ளையடிக்கப்படும் சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
பேஸ்புக் மூலம் ஆண்களை அடையாளம் கண்டு, வட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் மூலம் அவர்களுடன் பேசி , போலி காதல் உறவுகளை ஏற்படுத்தி, வலையில் விழுந்த ஆண்களை மிஹிந்தலை பகுதிக்கு அழைத்து செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த போலிக் காதல் வலையில் சிக்கிய ஆண்களை, காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்று, மரங்களில் கட்டி வைத்து, அடித்து, அவர்களின் மோட்டார் சைக்கிள்கள், பணம் மற்றும் பிற பொருட்களை கொள்ளையடிக்கப்படுகின்றது.
இந்த விடயத்துடன் தொடர்புடைய ஒரு குற்றக் கும்பலைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, 2 மோட்டார் சைக்கிள்கள், 4 கையடக்க தொலைபேசிகள் மற்றும் மேலும் பல பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பொருட்களின் பெறுமதி ஒரு கோடி ரூபாய்க்கு மேல் எனவும்,
கைது செய்யப்பட்டவர்கள் கெகிராவ, அனுராதபுரம், அசோகபுர, மற்றும் விஜயபுர பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் செய்த முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதலி மிஹிந்தலை நகரத்திற்கு வருமாறு அழைத்ததாகவும், அங்கு சென்ற பின், அந்தப் பெண்ணும் ஒரு குழுவினரும். இணைந்து தாக்கி, மரத்தில் கட்டி வைத்து, மோட்டார் சைக்கிள், பணம், கையடக்க தொலைபேசி மற்றும் வங்கி அட்டைகளை கொள்ளையடித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவங்களில் உயர் மட்ட வேலைகளில் பணியாற்றிய 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.










Leave a Reply