உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நேற்று (03.05) சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
அதன்பிரகாரம் இன்று தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாதென தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக நடைபெறும் இந்தத் தேர்தல், நாளை மறுதினம் காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளது. குறித்த உள்ளூராட்சித் தேர்தலில் 17,156,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களில் இருந்து தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 75,589 எனத் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகள் முடிவடைந்த நிலையில் இன்று (04)தொடங்கும் அமைதி காலத்தில் சட்டத்தை மீறும் அனைவருக்கும் எதிராகக் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படும் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றும் அமைதிக் காலத்தில் சட்டவிரோதமாகச் சுவரொட்டிகள், பதாகைகள் அல்லது கட்அவுட்களை யாராவது காட்சிப்படுத்தியிருந்தால், அவை அகற்றப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 65,000க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.










Leave a Reply