, , ,

பல வருடங்களின் பின் நடைமுறைக்கு வந்துள்ள படகுச் சேவை-மகிழ்ச்சியில் திளைக்கப் போகும் சுற்றுலாப் பயணிகள்

Spread the love

தலைமன்னார் ராமர் பாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான படகு சேவைகள்  மே 15 முதல் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார், தலைமன்னார் பகுதியில் கடலுக்குள் காணப்படுகின்ற ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் (மண் திட்டுகள்)வரை சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அழைத்துச் செல்லும் படகுச் சவாரி திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படவுள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இப் படகுச் சேவை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்றைய தினம் (22.04) செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மே மாதம் 15 ஆம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் மிக விரைவாக மேற்கொள்ளப்படும் எனவும்,
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டு நீண்ட காலமாகத் தாமதமாகியிருந்த இந்த திட்டத்தை துரித கதியில் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அதே வேளை, பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்,பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கைகள் தொடர்பில் கடற்படையினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள் எனவும், சுற்றுலாப் பயணிகளிடம் அறவிடப்படும் கட்டணம் தொடர்பில் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த கூட்டத்தில் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காகக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில்,
வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் பத்திநாதன் மற்றும் மன்னார் மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் டபிள்யூ.எம். கீர்த்தி ஸ்ரீ சந்திரரத்ன, மற்றும் பிரதேச செயலாளர்,முப்படையினர், பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page