,

கேப்பாப்பிலவு மக்களின் காணிகளை விடுவிக்க கோரி மகஜர் கையளிப்பு

Spread the love

கேப்பாபிலவு  மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு கோரி அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு.

முல்லைத்தீவு கேப்பாபிலவில் இராணுவத்தினர் வசமுள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி இன்று (11.04) வெள்ளிக்கிழமை கேப்பாபிலவு  கிராம மக்கள் முல்லைத்தீவு மாவட்ட  அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

இதேவேளை கேப்பாப்பிலவு மக்கள் தமது காணிகளை விரைவில் விடுவிக்கக் கோரிய மகஜர்  ஒன்றை கடந்த  மாதமும் (11.03) ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்குமாறு  முல்லைத்தீவு மாவட்டச்  செயலாளரிடம் கையளித்துள்ளனர்.  இதன்போது குறித்த கடிதத்தை தான் உரிய தரப்புக்களுக்கு அனுப்பி ஒரு பதிலைப் பெற்றுத்  தருவதாக மாவட்டச் செயலாளர்  தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றையதினம் (10.04) வியாழக்கிழமை கேப்பாபிலவு  மக்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று ஜனாதிபதியினுடைய சிரேஸ்ட உதவிச்  செயலாளரைச்  சந்தித்து கலந்துரையாடிய போது,   காணிகளை விடுவிப்பது தொடர்பிலான  எந்த ஒரு ஆவணங்களும்  தமக்கு  கிடைக்கவில்லை என கூறியிருந்தார்.

இதனையடுத்தே இன்றையதினம் கேப்பாபிலவு மக்கள்  முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரனிடம்  ஐனாதிபதி செயலகத்தில் கூறப்பட்ட விடயங்களைத் தெரிவித்ததோடு    புதிய மகஜரையும் கையளித்திருந்தனர்.

இதன்போது முல்லைத் தீவு மாவட்ட அரச அதிபர் கேப்பாபிலவு காணி தொடர்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு தம்மால் அனுப்பி வைக்கப்பட்ட மகஜரினையும் அதற்கான பதில்க்  கடிதத்தையும் கேப்பாபிலவு மக்களுக்கு  காண்பித்து அது தொடர்பாகத் தெளிவுபடுத்தியிருந்தார்.

இந்நிலையில் கேப்பாப்பிலவில்  ஒருபகுதியினரின் காணிகள் விடுவிக்கப்பட்ட போதிலும் பாடசாலை, ஆரம்ப சுகாதார நிலையம் , ஆலயங்கள் , தேவாலயம், பொதுநோக்கு மண்டபம் உள்ளிட்ட மக்களின் குடியிருப்புக்கள் இன்றும் இராணுவ கட்டுப்பாட்டிலேயே இருந்து வருகின்றதாகவும்  குறிப்பாக மக்களின் பயன்தரு தென்னை மரங்கள் குறித்த காணியிலேயே காணப்படுகின்றதாகவும், 62 நபர்களின் 171 ஏக்கர் காணிகள் தற்போது விடுவிக்கப்படாது இருப்பதாகவும்  மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல வருடகாலமாக தாம் தமது காணிகளை இழந்து சிரமங்களுக்கு மத்தியில் வாழ்வதாகவும் பல போராட்டங்கள் செய்தும் இதுவரை தீர்வு இல்லை என்றும் தமது காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் மீண்டும் தொடர் போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் எனவும் தெரிவித்தனர்.

அத்தோடு எதிர்வரும்  26  ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநயாக்கா முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிற்கு வருகைதர இருப்பதனால்  அவரிடமும்  கேப்பாபிலவு மக்கள் மகஜரினை கையளிக்க இருப்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page