வடக்கு கிழக்கில் சீனாவின் எந்தவொரு நடவடிக்கைக்கும் அனுமதியளிக்க முடியாது. செல்வம் எம்பி.
சீனாவின் அடிவருடிகள், இந்தியாவுடன் அநுர அரசு கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களைக் குழப்ப நினைத்தால் நிச்சயமாக அதனை எதிர்த்து நிற்போம். அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் சீனா எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது என ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம்(09.04) புதன்கிழமை நடைபெற்ற சேர் பெறுமதி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வலிக்கும் என்றும் இங்கே பலர் கூறுகின்றனர்.
ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் இலங்கையை மேலே கொண்டு வருவதற்கான முயற்சியை முதலில் செய்தது இந்தியாதான். எனவே இந்த ஒப்பந்தங்கள் சரியானவை என்றே கூற வேண்டும்.
இந்நிலையில், சீனாவின் அனுசரணையில், சீனாவின் அடிவருடிகள் இந்த ஒப்பந்தத்தைக் குழப்ப நினைத்தால் நாங்கள் நிச்சயமாக அதனை எதிர்த்து நிற்போம்.
மேலும் வடக்கு மற்றும் கிழக்கில் சீனா எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது என்றார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
பட்டலந்த வதைமுகாம் விடயத்துடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளோம்.
எனினும் இவ்வாறான விடயங்கள் சிங்கள தேசத்தில் நடக்கும்போது அது தொடர்பில் விசாரணை நடத்தவோ, அது தொடர்பில் ஆராய்வதற்கான குழுவை அமைக்கவோ மற்றும் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கோ நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
ஆனால், வடக்கில், கிழக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் பல விடயங்கள் நிகழ்ந்துள்ளன.1983இல் தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து விரட்டப்பட்டனர்.
தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் சிறையில் படுகொலை செய்யப்பட்டனர். 1983 கலவரம் வெலிக்கடை சிறைச்சலையிலேயே உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்தக் கலவரம் தமிழருக்கு எதிரானது என்பதனால் அது தொடர்பான விசாரணைகள் கைவிடப்பட்டன.
எனவே புதிய அரசாங்கம் 1983 கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்கள், படுகொலை செய்தவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அறிக்கையைச் சமர்ப்பிக்க குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். தமிழர் பிரச்சினை என இதனைத் தட்டிக் கழிக்கக் கூடாது.”எனத் தெரிவித்துள்ளார்.










Leave a Reply