செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் உண்மை கண்டறியப்பட வேண்டும் எனவும் கோரி, வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், செம்மணியில் நேற்று (20.06.2025) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
“இலங்கை அரசே, எம்மிடமிருந்து வலிந்து அபகரிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு, மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோருக்கு நீதி கோருகிறோம்” எனும் தொனிப்பொருளில், இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
“நீதி வேண்டும் நீதி வேண்டும் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும்!, இது மண்ணல்ல, புதைந்த உண்மை; அதைத் தோண்டி வெளிக்கொணருவோம்!”, “ஐ.நா. செவிகொடு, ஜனாதிபதி கண்விழி, மனித உரிமைகளைப் பாதுகாப்பீர்!”, “புதைகுழிகள் அடைக்கலம் அல்ல, உண்மை பேசும் தளங்கள்!”, “விசாரணையைத் துரிதப்படுத்து!”, “செம்மணிக்கு ஒரு நீதியா, பட்டலந்தவுக்கு ஒரு நீதியா?” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர், மதகுருமார்கள், அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
அதிகளவு பொலிஸாரும் இதன்போது குவிக்கப்பட்டிருந்தனர்.










Leave a Reply